Home Local news 10 வயதான சிறுவன் உயிரிழப்பு: பெற்றோர், பாட்டி கைது!

10 வயதான சிறுவன் உயிரிழப்பு: பெற்றோர், பாட்டி கைது!

கம்பஹா மாவட்டம் – படல்கம பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவயது முதல் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த மலீஷ துலக்க்ஷன என்ற சிறுவனை மத வழிபாடுகளினால் குணப்படுத்த முயன்ற பெற்றோரால் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

பெற்றோரின் இவ்வாறான கவனயீனமான செயற்பாடுகளுக்கு பிள்ளைகள் இரையாகுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், இவ்வாறான பெற்றோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

கடந்த புதன்கிழமை மாலை படல்கம பொலிஸ் பிரிவில் ஆண்டிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து சந்தேகத்துக்கிடமான துர்மணம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதற்கமைய குறித்த வீட்டில் காணப்பட்ட கட்டிலொன்றில் 10 வயதுடைய சிறுவனொருவன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டமை இனங்காணப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குறித்த சிறுவன் கடந்த 7 ஆம் திகதி காலை தொண்டை நோய் காரணமாக சுகவீனமடைந்துள்ளார். இதனைக் குணப்படுத்துவதற்காக குறித்த சிறுவனின் பெற்றோர் அவர்களுக்கு காணப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வதற்காக அவரது பெற்றோர் தொடர்ந்தும் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருந்தனரே தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகயீனமடைந்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோரும் பாட்டியும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பெற்றோரின் இவ்வாறான கவனயீனமான செயற்பாடுகளில் பிள்ளைகள் இரையாகக் கூடாது. எனவே இதுபோன்று கவனயீனமாக செயற்படும் பெற்றோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

உயிரிழந்த சிறுவன் கட்டான பகுதியில் வசிக்கும் மலீஷ துலக்க்ஷன என்பவராவார். குறித்த சிறுவன் சிறுவயது முதலே உடலில் சீனியின் அளவு குறைவாகக் காணப்பட்டமையின் காரணமாக நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக குறித்த சிறுவன் தொடர்ச்சியாக மேலைத்தேய மருந்துகளை பெற்று வந்துள்ளார். எனினும் அவரது பெற்றோர் மருந்து வழங்குவதை நிறுத்தி, மத வழிபாடுகளின் ஊடாக அவரது நோயை குணப்படுத்துவதற்கு முயற்சித்துள்ளனர். அத்தோடு சிறுவன் உயிரிழந்ததை அயலவர்களிடம் மறைப்பதற்கும் குறித்த பெற்றோர் முயற்சித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் தந்தையின் சகோதரன் தெரிவிக்கையில் , ‘என்னுடைய பிள்ளையும் இவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருப்பர். அவ்வாறு விளையாடுவதற்காக எனது பிள்ளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருடன் விளையாடுவதற்காகச் சென்றபோது , அவருக்கு சுகயீனமெனத் தெரிவித்து எனது பிள்ளையை திருப்பி அனுப்பியுள்ளனர். எனினும் அவருக்கு உரிய மருந்தைவழங்கியிருந்தால் அவர் உயிரிருடன் இருந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.