Home Local news மோட்டார் சைக்கிளில் இலங்கையை சுற்றி வந்த மருத்துவரான பெண்!

மோட்டார் சைக்கிளில் இலங்கையை சுற்றி வந்த மருத்துவரான பெண்!

மருத்துவரான பெண்ணொருவர் மோட்டார் சைக்கிள் மூலம் 6 நாட்களில் இலங்கையை சுற்றிவந்துள்ளார்.

ஷிவந்திகா ரொஷானி எனும் இம்மருத்துவர் தனது துணைவர் ஹசித தேஷான் சகிதம் அண்மையில் இச்சாகசப் பயணத்தை மேற்கொண்டார்.

Yamaha TW  மோட்டார் சைக்கிள் மூலம் இப்பயணத்தை மேற்கொண்டதாக ஷிவந்திகா ரொஷானி தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலிமுகத் திடலிலிருந்து இவ்விருவரும் தமது மோட்டார் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தனர்.

கொழும்பிலிருந்து புத்தளம், மன்னர் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற இவர்கள், அங்கிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை ஊடாக மீண்டும் கொழும்பை வந்தடைந்தனர். 6 நாட்கள் நீடித்த இப்பயணத்தின் மொத்த தூரம் 1885 கிலோமீற்றர்களாகும்.

இவர்கள் முதல் நாளில் கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், கல்பிட்டி, வில்பத்து, ஊடாக மன்னாரை சென்றடைந்தனர். இதன் பயணத் தூரம் 418 கிலோமீற்றர்களாகும்.

2 ஆவது நாள்  மன்னாரிலிருந்து புறப்பட்டு, மடு, தலைமன்னார், பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் சென்றனர். இரண்டாவது நாள் பயணத்தூரம்  253 கிலோமீற்றர்கள்.

3 ஆவது நாள் யாழ் நாகதீபம், ஊர்காவவற்துறை மற்றும் பருத்தித்துறை பகுதிகளுக்கு பயணித்தனர். அன்றைய தினம் 176 கிலோமீற்றர் பயணத்தினர்.

4 ஆவது நாளில் கைதடி, ஆனையிறவு, பரந்தன், முல்லைத்தீவு, திருகோணமலை, வாகரை ஊடாக வாழைச்சேனை வரை  340 கிலோமீற்றர் பயணித்தனர்.

5 ஆவது நாள் மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், அருகம்பை, மொனராகலை, ஊடாக தனமன்வில வரை 328 கிலோமீற்றர் பயணித்தனர்.

6 ஆவது நாள் திஸ்ஸமஹாராம, பதுளை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, பாணந்துறை ஊடாக 370 கிலோமீற்றர் தூரம் பயணித்து மீண்டும் கொழும்பை வந்தடைந்தனர்.