Home முள்ளிவாய்க்கால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தூசி தட்டப்படும் புலிப் பூச்சாண்டியும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தூசி தட்டப்படும் புலிப் பூச்சாண்டியும்

இறுதிக் கட்டப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வாரம், மே12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட மே18 ஆம் திகதியன்றே நினைவேந்தல் வாரம் நிறைவடையும்.

இறுதி யுத்தத்தில் மரணித்த தமது உறவுகளை நினைகூர்ந்த போது, நல்லாட்சியில் எவ்விதமான இடையூறுகளும் விளைவிக்கப்படவில்லை. சில வேளைகளில் கண்டும் காணாததுபோல அவ்வரசாங்கம் இருந்துவிட்டது. ஆகையால், எதிர்ப்புகள் கிளம்பவில்லை.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஆகியோரின் ஆட்சிக்காலத்தில், நினைவுகூர்தல், தடுத்தாட்கொள்ளப்பட்டது. இதனால், நினைவுகூரலை தடுத்தாட்கொண்ட செய்தி சர்வதேச மட்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டது.

இந்நிலையில், பேட்டியொன்றை வழங்கியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைகூர உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, அதை எவரும் தடுக்கவே முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து நினைவேந்தல் நிகழ்வுகளின் ஊடாக எவரும் அரசியல் செய்யக் கூடாதென அழுத்தம் திருத்தமாக பிரதமர் கூறியிருப்பதை சற்று ஆழமாகக் கவனிக்க வேண்டும். “இறந்தவர்களை வைத்து அரசியல் செய்தல்” இலங்கைக்கு ஒன்றுமே புதிதல்ல.

புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடம்பெற்ற யுத்தத்தில், ஆயுத ரீதியில் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். எனினும், புலிகளின் கொள்கை, கோட்பாடுகளை இன்னும் பலரும் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக, புலிப் பயங்கரவாதம் தலைதூக்குமென தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலரும், பெரும்பான்மையின கடும்போக்கு சக்திகளின் பிரதிநிதிகளும் எச்சரிக்கை செய்வர்.

இது கூட, புலியின் வாலைப்பிடித்து அரசியலில் இருப்பதை தக்கவைத்துக்கொள்ளும் ஓர் முயற்சி. எனினும், புலிகளால் இனி தலைத்தூக்க இயலாது என்ற பல்லவியை ஒவ்வொருமுறையும் பாடக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

இந்நிலையில்தான், முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பால் இந்த மாதம் 18ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் ஒன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவை மேற்கோள் காட்டி, தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைக்கும் சகல தகவல்கள் குறித்தும் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும். அத்துடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

புலிகளால் இனியும் தலைத்தூக்க முடியாது என்றிருக்கையில் இந்த புலனாய்வு தகவல்கள் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும். அதுமட்டுமன்றி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில், புலிப் பூச்சாண்டி தட்டியெழுப்பப்படுகின்றது. அதனூடாக மீண்டுமொரு நெருக்குதல் ஏற்படுத்தப்பட்டுவிடும் என்பதால் சகலரும் விழிப்பாக இருப்பதே காலத்தின் அவசியமாகும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவிசித்திரத் திருட்டு
Next articleஇன்றைய ராசிபலன் 17.05.2022 இதோ !!