Home Uncategorized பாடசாலை நண்பர்களிற்கிடையில் மோதல்… பெண் சுட்டுக்கொலையில் அதிர்ச்சி தகவல்!

பாடசாலை நண்பர்களிற்கிடையில் மோதல்… பெண் சுட்டுக்கொலையில் அதிர்ச்சி தகவல்!

மத்துகம காமினி மாவத்தையில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வர்த்தகரின் மனைவியை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு பாதாள உலகக்குழுக்களிற்கிடையிலான மோதலே இந்த கொலைக்கு காரணமென தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் (15) இரவு 8.30 மணியளவில் இந்த கொலைச்சம்பவம் நடந்தது.

மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பாதாள உலகக் கும்பல்களின் தலைவர்களான ஷான் மற்றும் கவாரி ஆகிய பாதாள உலகத் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையாளிகள் இருவரும் அசங்க என்ற வர்த்தகரை சுட்டுக் கொல்வதற்காக வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அவரை சுட முடியாமல் போனதும், அவரது மனைவியையும் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
3 பிள்ளைகளின் தாயான 40 வயதான சந்திம தில்ஹானி என்பவரே கொல்லப்பட்டவர்.

அவரது கணவர் அசங்க என்பவர் மத்துகம பிரதேசத்தில் ஒரு பணக்கார வர்த்தகர் ஆவார். உடற்பயிற்சி மையம் மற்றும் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். நீண்டகாலம் தென்கொரியாவில் வேலை செய்தவர், தற்போது மத்துகமவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் மத்துகம பிரதேசத்தில் பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் ‘கவாரி’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம பகுதியை சேர்ந்த ஷான், கவாரி என்ற பாதாள உலக குண்டர்கள் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்த நெருங்கிய நண்பர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் பின்னர் பாதாள உலகக்குழு உறுப்பினர்களாகினர். ஒரே பாதாள உலகக் கும்பலில் இயங்கி வந்தனர். எனினும், சில காலமாக அவர்களிற்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அந்த சச்சரவுகளால் கவாரி, ஷானின் பாதாள உலகக் கும்பலை விட்டு வெளியேறி தனி பாதாள உலகக் கும்பலை உருவாக்கினார்.

சில வருடங்களுக்கு முன்னர் ஷான் நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச் செல்ல, கவாரி மத்துகம பாதாள உலகத்தை கைப்பற்றியிருந்தார்.

இரண்டு பாதாள உலகக்குழு உறுப்பினர்களிற்கிடையிலுமான மோதல் உச்சமடைய, கடந்த 9ஆம் திகதி மத்துகமவில் ஷான் என்பவருக்குச் சொந்தமான நிதி நிறுவனமொன்றை கவாரி பட்டப்பகலில் தாக்குதல் நடத்தி அழித்துள்ளார்.

இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த பாதாள உலக தலைவன் ஷான், கவரியின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் அசங்கவை படுகொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தனக்கு ஆபத்து நேருமென தொழிலதிபர் முன்கூட்டியே ஊகித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அவர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் சிசிடிவி கமராக்களையும் பொருத்தியுள்ளார். தனக்கு எதிரான அச்சுறுத்தல் காரணமாக மாலை 6 மணிக்குப் பிறகு வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வர வேண்டாம் என்று தொழிலதிபர் தனது மனைவியை எச்சரித்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

ஆனால் நேற்று இரவு 8.30 மணியளவில் வீட்டின் முன்புறம் உள்ள கூண்டுகளில் இருந்த நாய்களுக்கு உணவளிக்க கதவு திறக்கப்பட்டது. அப்போது மறைந்திருந்த இரு பாதாள உலக குழுவினர் ஒரே நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து தொழிலதிபரை சுட முயற்சித்துள்ளனர்.

துப்பாக்கிதாரிகளைக் கண்டதும் வர்த்தகர், தனது 11 வயது மகனுடன் வீட்டின் மாடி அறையொன்றுக்குள் ஓடி ஒளிந்துள்ளார்.

அவரை விரட்டிச் சென்ற துப்பாக்கிதாரிகள், கதவைத் திறக்க முயன்றனர். எனினும், கதவு திறக்கவில்லை. இதையடுத்து, அறையை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதேவேளை, வீட்டின் கீழ்ப்பகுதியில் வர்த்தகரின் மனைவியும், 17 வயதான இன்னொரு பிள்ளையும் இருந்துள்ளனர்.

கீழ்ப்பகுதிக்கு வந்த துப்பாக்கிதாரிகள் மயக்கமடைந்து விழுந்திருந்த மனைவியின் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அந்த வீட்டில் ரி56 ரக துப்பாக்கியால் 7 ரவைகள் சுடப்பட்டுள்ளன. கொலையாளிகள் ரி56 ரக துப்பாக்கி, மற்றும் 9 எம்எம் ரக கைத்துப்பாக்கியை கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த போது பரிமாறப்பட்ட தொலைபேசி செய்திகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஷான், தனது பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவரைப் பயன்படுத்தி இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.