Home Local news கோழி இறைச்சி வாங்கச் சென்று வீடு திரும்பாத அட்டுலுகம சிறுமி சதுப்பு நிலத்திற்குள் சடலமாக மீட்பு

கோழி இறைச்சி வாங்கச் சென்று வீடு திரும்பாத அட்டுலுகம சிறுமி சதுப்பு நிலத்திற்குள் சடலமாக மீட்பு

பண்டாரகம, அட்டுலுகமவில் காணாமல் போன 9 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ இதனைத் தெரிவித்தார்

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா எனும் குறித்த சிறுமி நேற்று (27) முற்பகல் 10.00 மணியளவில் அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு அவரது தாய் கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒரு மணித்தியாலம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், அவரை சிறுமியின் தாய் தேடியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த கோழி இறைச்சிக் கடைக்கு முன்னாலிருந்த CCTV கெமராவை சோதனையிட்டபோது, சிறுமி கடைக்கு வந்து, 10.12 மணிக்கு மீண்டும் திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது.

ஆயினும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாணந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த சிறுமி, அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் சதுப்பு நிலமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை கொலை செய்துள்ளதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ, சிறுமிக்கு வேறே ஏதேனும் வகையில் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நிஹால் தல்தூவ தெரிவித்தார்.